×

சென்னை வங்கிகளில் ரூ.250 கோடி கடன் பெற்று மோசடி தொழிலதிபருக்கு சொந்தமான 15 இடங்களில் சோதனை: அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை; முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

சென்னை: உணவு பொருட்கள் ஏற்றுமதி நிறுவனம் வங்கியில் ரூ.250 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் சென்னை தொழிலதிபருக்கு சொந்தமான 15க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சென்னை கோடம்பாக்கத்தை தலைமையிடமாக கொண்டு ‘ஓசியானிக் எடிபிலி இன்டர்நேஷ்னல் லிமிடெட்’ என்ற பெயரில் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் பழம் மற்றும் காய்கறிகள் மற்றும் கடல் உணவு பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் உரிமையாளர் ஆரோக்கியசாமி ஜேம்ஸ் வால்டர் தனது ஏற்றுமதி நிறுவனத்தை விரிவுப்படுத்த கடந்த 2019ம் ஆண்டு பல்வேறு வங்கிகளில் ரூ.250 கோடி வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், ஏற்றுமதி செய்வதற்காக வாங்கிய கடனை அதற்கு பயன்படுத்தாமல் வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளார். அதேநேரம் வங்கி கடனையும் கட்டவில்லை.

இதுகுறித்து கடன் கொடுத்த வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் படி, தொழிலதிபர் ஆரோக்கியசாமி ஜேம்ஸ் வால்டர் மற்றும் அவரது ஏற்றுமதி நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பல கோடி ரூபாய் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டது தெரியவந்தது. அதைதொடர்ந்து சட்டவிரோத பணம் பரிமாற்றம் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரணைக்கு எடுத்தது. அதன்படி ஆரோக்கியசாமி ஜேம்ஸ் வால்டருக்கு சொந்தமான ஏற்றுமதி நிறுவனம் மற்றும் வீடுகள், தொழிற்சாலைகள், அந்நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

குறிப்பாக, கோடம்பாக்கத்தில் உள்ள தலைமை அலுவலகம், சூளைமேடு, அமைந்தகரை, தி.நகர் சரவணா சாலையில் உள்ள அலுவலகம், மேற்கு தாம்பரத்தில் உள்ள அலுவலகம், பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், வேளச்சேரி என தமிழகம் முழுவதும் 15க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனையில் சட்டவிரோதமாக வெளிநாடுகளில் முதலீடு செய்த ஆவணங்கள், ரொக்க பணம், வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்த ஆவணங்கள், சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post சென்னை வங்கிகளில் ரூ.250 கோடி கடன் பெற்று மோசடி தொழிலதிபருக்கு சொந்தமான 15 இடங்களில் சோதனை: அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை; முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Food Items Export Company ,Chennai Banks ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் இருந்து...